அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நிலையில் எச்1பி விசாக்களுக்கு மீண்டும் கட்டுப்பாடு


அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், அமெரிக்கர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக எச்1பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


இது, இந்தியர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை பெறுவதற்காக அந்நாட்டு அரசு எச்-1பி விசாக்களை வழங்கி வருகிறது.


இதில், மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம் பயன் அடைந்தவர்கள் இந்தியர்களே. முக்கியமாக, ஐடி நிறுவனங்கள் எச்-1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்களை பணி அமர்த்தியுள்ளன.


எச்-1 விசா கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட வேலை மற்றும் அனுபவத்திற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


தற்போது, அமெரிக்கர்களுக்கு பணி வழங்குவதற்கு பதிலாக அவர்களை விட குறைவான சம்பளத்தில் இந்தியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.


இதன் காரணமாக, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது என்பதே குற்றச்சாட்டு. எனவே, இந்த சம்பள ஒழுங்குமுறையை கொண்டு வருவதன் மூலம் சரியான ஊழியர்களுக்கு சரியான வேலை வழங்கப்படும்,

மலிவான சம்பளத்தில் ஆட்கள் கிடைக்கிறார்கள் என்பதற்காக அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு சுரண்டப்படாது என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஆனால், இந்த நடவடிக்கையால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்கர்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய கட்டுப்பாடுகளை டிரம்ப் அரசு கொண்டு வந்திருப்பது அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.