கரோனாவிலிருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகன்

கரோனாவிலிருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகன்ஹைதராபாத்: கரோனா பாதித்து குணமடைந்த பிறகும், தொற்று பாதிப்புக் காரணமாக, பெற்ற தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மகன் மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானாவில் 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி, தனது மகனும் குடும்பத்தாரும் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால், வீட்டுக்கு எதிரே இருக்கும் காலி இடத்தில் கடந்த இரணடு நாள்களாக தவித்து வருகிறார்.


தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் கரோனா தொற்று அச்சம் காரணமாக தங்களது நெருங்கிய உறவுகளைக் கூட நெருங்க விடாமல் செய்யும் சில மனிதாபிமானமற்ற நபர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.


முதியோர் இல்லத்தில் வசித்து வந்த பாலாமணிக்கு கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பூரண குணம்பெற்று, கரோனா தொற்று இல்லை என கடந்த வாரம் பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது மகனுக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட போது தகவல் சொல்ல முயற்சித்தது.


ஆனால் அது தோல்வியில் முடிந்தது  இறுதியாக மருத்துவமனையே பாலாமணியை அவரது வீட்டு வாசலில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விட்டது.


ஆனால் தனது தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மகன் மறுத்துவிட, கரோனா தொற்றுக் காரணமாக முதியோர் இல்லமும் மூடப்பட்டதால் செல்ல வழியின்றி, வீட்டின் எதிரில் உள்ள காலியிடத்தில் தங்கியிருக்கிறார் பாலாமணி.


வீட்டில் இருந்தால் அக்கம் பக்கத்தினர் கேட்பார்களே என்று அஞ்சி, மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக இருக்கும் பாலாமணியின் மகன், வீட்டை வெளியே பூட்டிவிட்டு, தனது மனைவி, பிள்ளைகளுடன் வெளியே சென்றுவிட்டார்.


இது குறித்து தகவல் அறிந்த மூத்த நீதிபதி கிரண்மயி, தேவையான உதவிகளை அளிப்பதாக பாலாமணிக்கு உறுதிமொழி அளித்துள்ளார்.