63 நாயன்மார் பட்டியல் - காரி நாயனார்

நமது உண்மை   செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு :


“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” 


சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.


காரி நாயனார் :



“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.


காரி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.


மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார்


திருக்கடவூர் என்னும் மறையோர்கள் வாழ்கின்ற வளமிகுந்த இப்பகுதியிலே காரி நாயனார் என்னும் செந்நாப்புலவர் அவதரித்தார்.புலமைமிக்க இச்சிவனடியார் தமிழை நன்கு ஆராய்ந்து அறிந்து கவிபாடும் திறத்தினைப் பெற்றிருந்தார்.இவர் சிந்தையிலே சங்கரர் இருக்க, நாவிலே சரஸ்வதி இருந்தாள். திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்து திருசடை அண்ணலையும், அவர் தம் அடியார்களையும் பேணி வந்தார். 


அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.


தமிழ்த்துறைப் பயன் தெரிந்து அகத்திணை தழுவிய கோவைப் பிரபந்தமியற்றி அதன் முக்கியப் பொருளான வீட்டின்ப விளக்கம் இனிது புலப்பட மூவேந்தர் முன்னிலையில் அரங்கேற்றி அவர்களால் மகிழ்ந்துதவப் பெற்ற பெரும் பரிசுத்தொகை முழுவதும் சிவதலங்கள் நிருமாணித்தலினும் சிவனடியார்க்கு வெகுமதி செய்தலினும் விரயமாக்குஞ் சிவ தொண்டு நெறிநின்ற காரி நாயனார், தானே அகத்திணைக் கோவையின் முக்கியப் பொருளாகிய வீட்டின்பமளிப்பவனாகிய சிவன் பெருங் கருணைக்கு ஆளாதலும்  தமது பிராரப்த முடிவில் கூட்டோடே சிவன் மகிழ்ந்துறையும் திவ்விய உலகாகிய  திருக் கயிலையை அடைந்து இன்புற்றிருத்தலும் சொல்லாமே அமையுமாயினுஞ் சேக்கிழார் நாயனார் சொல்லி யின்புறுதல் கொண்டு அவர் பேற்றின் மகிமை நன் குணரப்படும்.


அது, "ஏய்ந்தகடல் சூழுலகி லெங்குந்தம் இசைநிறுத்தி ஆய்ந்தவுணர் விடையறா அன்பினராய் அணிகங்கை தோய்ந்த நெடுஞ் சடையார்தம் அருள்பெற்ற தொடர்பினால் வாய்ந்தமனம் போலுடம்பும் வடகயிலை மலைசேர்ந்தார்" என வரும்.


அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார்.


ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் திருப்பணிகள் பல செய்தார்.ஒருமுறை காரி நாயனார், சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம் தமது பெயரால் காரிக்கோவை என்னும் தமிழ் நூல் ஒன்றினை ஆக்கினார்.


மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பினைப் பெற்றார். அவர்கட்கு, அந்நூலின் தெள்ளிய உரையை நயம்படக் கூறினார். இவருடைய தமிழ்ப் புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர்.


பொற் குவியலோடு, திருக்கடவூர் திரும்பிய நாயனார், சிவன் கோயில்களைப் புதுப்பித்தார். சிவன் கோயில்கள் பல கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு அமுதளித்து பெரு நிதிகளை அள்ளி அள்ளிக் கொடுத்து அகமகிழ்ந்தார்.


தமிழறிவால் நூல்கள் பல  இயற்றி பெரும் பொருள் பெற்று அப்பொருளை எல்லாம் சிவாலயத்துக்கும், சிவனடியார்களுக்குமே வழங்கி பேரின்பம் பூண்டார். 


இவ்வாறு கங்கை வேணியரின் கழலினைச் சிந்தையிலிருத்திய தொண்டர் திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரையும், அபிராம வல்லியையும், பாமாலையாம் பூமாலையால் அல்லும் பகலும் சேவித்தார்.


எம்பெருமான் தொண்டர்க்குப் பேரருள் பாலித்தார். தமது புகழ் உடம்போடு கயிலைமலை சேர்ந்து பேரின்பம் கண்டார் காரி நாயனார்.


காரி நாயனார் புராணம்


இறைவன்: அமிர்தகடேஸ்வரர்


இறைவி: அபிராமியம்மை


அவதாரத் தலம்: திருக்கடவூர்


முக்தி தலம்: திருக்கடவூர்


குருபூசை நாள்: மாசி - பூராடம்


காரியார் நாயனாரின் குருபூஜை மாசி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


"வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும்
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்."


பாடல் விளக்கம்:-


தேன் பொருந்திய மலர்க்கொன்றையை அணிந்த சடையையுடைய இறைவரின் திருவடியைப் பேணும் காரி நாயனாரின் அடிகளை வணங்கிக் கடல் போல் நிறைந்து வழியும் மதம் பொருந்திய யானைப் படையையுடைய பாண்டியர்களுக்குரிய சந்திர மரபில் தோன்றிய "நின்றசீர் நெடுமாற நாயனாரின்" திருத்தொண்டினைக் கூறுவாம்.


காரிக்கு அடியேன்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்