63 நாயன்மார் பட்டியல் - கலிக்கம்ப நாயனார்

நமது உண்மை   செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு :


“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” 


சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.


கலிக்கம்ப நாயனார்



கலிக்கம்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்


நடுநாட்டில் வளங்கள் சிறந்த பழம்பதி திருப்பெண்ணாகடம் என்பது. அவ்வூரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர் கலிக்கம்ப நாயனார்.


அவர் சிவனடிப்பற்றாகிய அன்புடனே வளர்ந்து அப்பதியில் தூங்கனை மாடத் திருக்கோயில் எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருடைய திருத் தொண்டிலேயே பற்றாகப் பற்றிப் பணிசெய்து வந்தனர்.


அவர் வேறு ஒரு பற்றுமில்லாதவர். சிவன் அடியார்களிற்கு விதிப்படி இனிய திருவமுதினை ஊட்டி வேண்டுவனவற்றை இன்பம் பொருந்த அளித்து வந்தார்


சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற இச்சிவனடியார் அடியார்களை உபசரித்து பாத பூசை செய்து அறுசுவை உணவளித்து பொன்னும் பொருளும் உணவும் கொடுத்து அளவற்ற சேவை செய்து அகமகிழ்ந்தார்.


திருசடையுடைய விடையவர் திருவடியை இரவும் பகலும் இடையறாது கருத்தில் கொண்டு வாழ்ந்த இச்சிவனடியார், அந்நகரிலுள்ள தூங்கானைமாடம் என்னும் சிவக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கங்காதரனை மறவாத சிந்தையுடையவராய் வாழ்ந்து வந்தார். வழக்கம் போல் சிவனடியார் ஒருவர் வந்தார். 


நாயனார் அச்சிவனடியாரைக் கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச்  செய்து பாதபூசையைத் தொடங்கினார். அவரது மனைவியார் மனையைச்
சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக் கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும் அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது.


அதற்குக் காரணம் அச்சிவத்தொண்டர் முன்பு நாயனாரிடத்தில்   வேலை  பார்த்தவர். அதனால் அவர் மீது சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள்.


மனைவியின் தயக்க நிலை கண்டு நாயனார் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப் புரிந்து கொண்டார்.


சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் நாயனார். விரைந்து சென்று வாள் எடுத்து வந்தார்.


மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து அம்மையாரது கரத்தை துண்டித்தார்


சிவனடியார். கலிக்கம்பரின் செயலைக் கண்டு துணுக்குற்றார்
கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக, சிவனை  நினைத்த நிலையில் மயக்கமுற்றாள்.


அந்த அறையிலே பேரொளிப் பிரகாசம். சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது சிவத்தொண்டு புரிந்து வரும் நாயனாரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் விடை மீது எழுந்தருளினார்.


சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் அம்பலவாணரின் அருட் தோற்றத்தைத் தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிந்து அந்தர்த்தியாமியானார்.


நாயனார் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத் தொண்டுகள் பல புரிந்து இறுதியில் விடையவர் திருவடிமலரினைச் சேர்ந்து  பேரின்பம் பூண்டார்.


சேக்கிழார் வாக்கில், "வெறித்த கொன்றை முடியார்தம் அடியார் இவர்முன் மேவுநிலை குறித்து வெள்கி நீர்வாரா தொழிந்தாள் என்று மனங்கொண்டு மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கைதறித்துக் கரக நீரெடுத்துத் தாமே அவர்தாள் விளக்கினார்" - "விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து துளக்கில் சிந்தையுடன் தொண்டர் தம்மை யமுது செய்வித்தார் அளப்பில் பெருமை யவர்பின்னும் அடுத்த தொண்டின் வழிநின்ற களத்தில் நஞ்ச மணிந்தவர்தாள் நிழற்கீ ழடியா ருடன்கலந்தார்" என வந்துள்ளவாறு காண்க.


குருபூஜை


கலிக்கம்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்க்கு அடியேன்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


திருச்சிற்றம்பலம்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்