பஞ்சபூதத் தலங்கள் - வாயுத்தலம் பகுதி 4

பஞ்சபூதத் தலங்கள் வாயுத்தலம் 


திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் -  வாயு


திருக்காளத்தி - ஸ்ரீ காளஹஸ்தி



இறைவன் - ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்


இறைவி - ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை


தலமரம் - மகிழம்.


தீர்த்தம் - ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு


இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனி பகவான் மட்டும் உள்ளார்.


கனகதுர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. நடராச சபையில் இரண்டு திருமேனிகளும், இரண்டு சிவகாமித் திருமேனிகளும் உள்ளன. அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் அழகுற உள்ளன.


இத்திருக்கோயிலுடன் தொடர்புடைய திரௌபதியம்மன் கோயிலுக்குரிய பாண்டவர் திருமேனிகள், பாதுகாப்பாக இங்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. கால பைரவர் சந்நிதி விசேஷமானது. சப்தமாதாக்கள் உள்ளனர்.


அம்பாள் - ஞானப்பூங்கோதையின் சந்நிதி கிழக்கு நோக்கியது. அழகான கருவறை, கோஷ்ட மூர்த்தங்கள் எவையுமில்லை. அம்பாள் நின்ற திருக்கோலம் - இரு திருக்கரங்கள்.


திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்தமேரு' உள்ளது. அம்பாள் இடுப்பில் ஒட்டியாணத்தில் 'கேது' உருவமுள்ளது. எதிரில் சிம்மம் உளது. சந்நிதிக்கு வெளியில் பிராகாரத்தில் தலைக்கு மேற்புறத்தில் ராசிச் சக்கரம் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.


அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமைதோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.


அடுத்து வலமாக வரும்போது சித்திரகுப்தர், இயமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன. எதிரில் சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது. முகலாயர் படையெடுப்பின் போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்.


அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்று கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம்.


சம்பந்தர் காளத்தியை அடைந்து பாடிப் பரவினார். இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலியவைகளைப் பாடித் தொழுதார்.


ஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்து தொழுது வடகயிலை நினைவுவர, கயிலைக்கோலம் காண எண்ணி யாத்திரையைத் தொடங்கினார்.


திருவல்லம் தொழுத சுந்தரர் காளத்தி வந்து இறைவனடி துதித்து, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.


இத்தலம் மூவர் பாடல் பெற்றது.


அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப் பாளர்களால்  உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.


இதற்குப் பக்கத்தில் அருமையான பெரிய ஸ்படிகலிங்கம் உள்ளது. இது ஸ்ரீ ஆதி சங்கரரின் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது.


பக்கத்தில் சிலந்தி, யானை, பாம்பு, கண்ணப்பர் முதலிய திருவுருவங்கள் உள்ளன. இதன் பக்கத்தில் மாடிப்படிகள் உள்ளன. மேலேறிச் சென்றால் கண்ணப்பரைத் தரிசிக்கலாம். எல்லோருக்கும் இது அநுமதியில்லை யாதலால் பூட்டப்பட்டுள்ளது.


பிராகார வலத்தை முடித்துப் பழைய படியே தட்சிணாமூர்த்தியை வந்து தொழுது வெளியேறுகிறதாம். வரும்போது இடப்பால் 'மிருத்யுஞ்சலிங்க' சந்நிதி உள்ளது. வெளியில் வலப்பால் தலமரம், மகிழ மரம் உள்ளது.


காளியைத் தொழுதவாறே எதிரில் உள்ள கோபுரத்தைத் தாண்டி வெளியேறி, இடப்பக்கம் திரும்பி கைலாசகிரிக்குச் செல்வேண்டும். இதை மக்கள் கண்ணப்பர் மலை என்றழைக்கின்றனர். ஏறிச் செல்ல நல்ல படிகள் உள்ளன. அதிக உயரமில்லை. மேலேறிச் சென்றால் சிறிய சிவலிங்ச் சந்நிதியைத் தரிசிக்கலாம். கண்ணப்பர் சந்நிதி உள்ளது. வில்லேந்தி நிற்கும் திருக்கோலம். மலைக்கிளுவை மரங்கள் இரண்டு சுவாமிக்கு முன்னால் மலையில் உள்ளன.


இம்மலையிலிருந்து பார்த்தால் ஊரின்தோற்றம் நன்கு தெரிகிறது. அவ்வாறு பார்க்கும்போது நேரே தெரிவது துர்க்கை மலைக்கோயில் வலப்பால் தெரிவது முருகன் மலைக்கோயில்.


தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முத்தி எனப்படுகிறது. "ஸ்ரீ காளத்தி பிரவேச முத்தி" என்கின்றனர்.


இங்கு நதி - நதி - பர்வதம் என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி - பொன் முகலியாற்றைக் குறிக்கும்.


இத்தலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சத்திரமும் கல்யாண மண்டபமும் உள்ளன. தேவஸ்தான 'விருந்தினர்விடுதியும்' உள்ளது. தெலுங்கு கவிஞரான 'தூர்ஜாட்டி' என்பவர் இத்தலத்தைப் புகழ்ந்து 'ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர மகாத்மியம்' என்ற பெயரில் கவிதை வடிவில் நூலொன்றை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார்.


வீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், கருணைப் பிரகாசர் ஞானப் பிரகாசர் வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உரியன.


சேறைக் கவிராயர் உலா ஒன்றும் பாடியுள்ளார். விஜயநகர, காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் 'தென்கயிலாயமுடையார்' திருக்காளத்தி உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகின்றனர். முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு 'காளத்தி உடையான் மரக்கால்' என்ற அளவு கருவி இருந்ததாகக் குறிப்பிடுகிறது.


அழியாச் செல்வமான இறைவியும் இறைவனும். பர்வதம் - கைலாசகிரி, இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனச் சொல்லப்படுகிறது.


பொன்முகலி உத்திரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது பண்டை விசேஷமாகும்.


இன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டததைச் சேர்ந்துள்ளது. மக்கள் வழக்கில் 'காளாஸ்திரி' என்று வழங்கப்படுகிறது.


ரேணிகுண்டா - கூடூர் புகை வண்டி மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம்.


திருப்பதியிலிருந்து 40 km. தொலைவிலும், சென்னையிலிருந்து 110 km. தொலைவிலும் உள்ள சிறந்த தலம், திருப்பதி, ரேணிகுண்டாவிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன.


சென்னையிலிருந்தும் காஞ்சியிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. 


நாளை  ஆகாயம்  ஆலயம் தொடரும்


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு


திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்