மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் இளைய சகோதரரான வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். தொழிலதிபராக விளங்கும் வசந்தகுமார்,தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆகஸ்டு 10-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டனர்.
வசந்தகுமாரின் உடல்நிலை பின்பு மோசமடைந்தது. ஆனால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்றிரவு (ஆகஸ்ட் 28) 7 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவருடைய உயிர் பிரிந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் இரங்கல் செய்தியை இணைத்துள்ளார். வசந்தகுமாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு எனவும், ஏழை, எளிய மக்களுக்காக அர்ப்பணித்தவர் , எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
எம்.பி. வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு - முதல்வர் பழனிசாமி இரங்கல்
கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். இன்முகம்- பழகுவதற்கு இனியர்; கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர். காங்கிரஸ் கட்சியினருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபமும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
உள்ளத்தால், அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்தவர் வசந்தகுமார், வசந்தகுமார் என்றால், காங்கிரஸ் என்றால் வசந்தகுமார் என வாழ்ந்தவர் என கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி தொடங்கி பலரும் வசந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் உறுதியான காங்கிரஸ் தலைவர் ஆவார். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர் திரு.வசந்தகுமார். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தவர் - அன்புமணி ராமதாஸ் இரங்கல்.
நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர் திரு.வசந்தகுமார். - கமல்ஹாசன்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தமிழக எம்.பி. வசந்தகுமாரின் மறைவு சோகத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கவுரவ் கோகோய், மகாராஷ்டிர அமைச்சர் பாலாசாகிப் தோராட் உட்பட பல்வேறு தலைவர்கள் எச்.வசந்த குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
வசந்தகுமாரின் மறைவை முன்னிட்டு ரஜினி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:"அருமை நண்பர் வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்".இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான திரு.H.வசந்த குமார் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்ததாக அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்