பிளாஸ்மா வங்கி-சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை

 கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் மருந்துகள் ஏதும் இல்லாத சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதனை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி, சோதனை அடிப்படையில் நோயை குணப்படுத்த தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்மா தொடர்பான ஆய்வு பணிகள் மேற்கொள்ள ஐசிஎம்ஆரிடம் தமிழக அரசு அனுமதி பெற்று உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.


இதில் மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பிளாஸ்மா வங்கி தமிழகத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள், நெகடிவ் பரிசோதனை முடிவு பெறப்பட்ட நாளில் இருந்து 14வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள்.சென்னையில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிக்கப்படும். பரிசோதனைகளை அதிகரித்து பரவலை கட்டுப்படுத்துவதே சிறந்த முறையாக இருக்கிறது.


அதேபோல் குறைந்தபட்சம் அடுத்த 3 மாதங்களுக்காவது சென்னையில் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். பொதுமக்களுக்கு சாதாரண காட்டன் முகக்கவசமே போதுமானது. என்95 முகக்கவசம் அவசியம் இல்லை. இவ்வாறு சென்னை மாநகராட்சி ரிப்பன்  மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தனியார் பரிசோதனை மைய பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  கூறினார்.