ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

நமது உண்மை  செய்திகள்  குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு


ஐயடிகள் காடவர்கோன் நாயனார்உலகம் புகழ அரசோச்சிய பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சியில் பல்லவப் பேரரசருள் ஒருவராய் விளங்கியவர்தான் ஐயடிகள் காடவர்கோன் என்பவர். வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்து நீதிபிறழாமல் சைவ சமயத்தை வளர்த்து ஆட்சிபுரிந்து வந்தார்.


இவ்வேந்தர் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கினாற் போல் பக்தியிலும், இறை வழிபாட்டிலும் மேம்பட்டு விளங்கினார். அரனாரின் திருவடித் தொண்டினைப் பேணி அரசாண்டார்.


கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். நல்ல தமிழ்ப் புலமை மிக்க இப்பூபாலன் வெண்பா பாடும் திறம் பெற்றிருந்தார். வண்ணத் தமிழ் வெண்பாவால் வேணி பிரானை வழிபட்டார்.


ஐயடிகள் காடவர்கோன் வடமொழியையும், தென்மொழியையும், இயல், இசை, நாடகத்தையும் வளர்க்க அரும்பாடு பட்டார். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் தோறும் சென்று திருசடை அண்ணலை வழிபட எண்ணினார்.


சிவ வழிபாட்டில் சித்தத்தைப் பதிய வைத்த மன்னர்க்கு அரசாட்சி ஒரு பெரும் பாரமாகத் தெரிந்தது. ஆட்சிப் பொறுப்பைத் தமது குமாரன் சிவ விஷ்ணு விடம் ஒப்புவித்தார்.


குமாரனுக்கு முடிசூட்டி மகிழ்ந்த மாமன்னன் ஒருநாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவயாத்திரையைத் தொடர்ந்தார். பற்பல தலங்களுக்குச் சென்று, எம்பெருமானை உள்ளங் குழைந்து உருகி துதித்து, ஆங்காங்கே தம் புலமையால் வெண்பா பல புனைந்தருளிய காடவர்கோன் நாயனார், கண்ணுதலார் திருவடி நீழலை அடைந்து இன்புற்றார்.


குருபூஜை


ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
"பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்குப் பா அணிந்த
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக்
கை அணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம்."


பாடல் விளக்கம்:-


நச்சுப் பையையுடைய பாம்பை மணி மாலையாய் அணிந்த இறைவற்கு வெண்பாப் பாடிச் சாத்திய ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் திருவடிகளை வணங்கி, கையில் மழுவையுடைய இறைவரின் திருவடிகளைப் பணியும் சிந்தனையைச் செய்தவத்தால் பெற்று விளங்கும் கணம் புல்ல நாயனாரின் திருத்தொண்டினை இனி விரித்துச் சொல்வாம்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"


"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' 

 ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமதுஉண்மை  செய்திகள்


குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி.


தொகுப்பு  மோகனா  செல்வராஜ்