விமானத்தில் வரும் தாய்ப்பால்

1,000 கி.மீ., தொலைவில் இருந்து விமானத்தில் வரும் தாய்ப்பால்டில்லியில், அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு, தினமும், 1,000 கி.மீ., தொலைவில் இருந்து, தாய்ப்பால் கொண்டு வரப்படுகிறது.

லடாக்கின் லே பகுதியில், கடந்த மாதம், ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் உணவுக் குழாயும், மூச்சுக் குழாயும், ஒன்றோடு ஒன்று இணைந்திருந்ததால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.இதையடுத்து, பிறந்த மறுநாளே, அக்குழந்தை டில்லிக்கு அழைத்து வரப்பட்டு, இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டது. அறுவை சிகிச்சை மூலம், குழந்தையை பெற்றெடுத்ததால், குழந்தையின் தாயால், டில்லிக்கு பயணம் மேற்கொள்ள இயலவில்லை.
குழந்தையின் தந்தை ஜிக்மேத் வாங்டு, மருத்துவமனையில் இருந்தவாறு குழந்தையை கவனித்து வருகிறார். குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தாய்ப்பால் அவசியம் என, குழந்தையின் தந்தையிடம் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, லே பகுதியில் இருந்து, குழந்தைக்கான தாய்ப்பாலை டில்லிக்கு எடுத்து வர, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை வாங்டுவின் நண்பர், லே விமான நிலையத்தில் பணிபுரிவதால், அவரின் உதவியுடன், விமானம் மூலம், குழந்தைக்கான தாய்ப்பால், தினமும் ஒரு சிறிய பாட்டில் மூலம் டில்லிக்கு எடுத்து வரப்படுகிறது.