கிராமத்திலேயே முதல் முறை.. பிளஸ் 2 பாஸான பழங்குடியின மாணவி! நேரில் வாழ்த்திய டிஎஸ்பி.. நெகிழ்ச்சி
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கிராமத்திலேயே முதல்முறையாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார், பழங்குடியின மாணவி ஒருவர். அவரை டிஎஸ்பி சங்கீதா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ளது பழங்குடியின மக்கள் வசிக்கும் இருளர்பட்டி கிராமம். விறகு சேகரிப்பது, கூலி தொழில், ஆடு,மாடு மேய்ச்சலை பிரதானமாக கொண்ட இந்த கிராமத்தில் இதுவரை 10ம் வகுப்பு வரை படித்தவர்களே இல்லை என்கின்றனர்.
கிருஷ்ணவேணி பாலக்கோடு அரசு விடுதியில் தங்கி, திருமல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, தற்போது 12 ஆம் வகுப்பில், தேர்ச்சி பெற்றுள்ளார். பழங்குடியின மக்கள் வசிக்கும் இருளர்பட்டியில் உயர்கல்வி கல்வி என்பதே எட்டாக்கனியாக உள்ளநிலையில், முதல்முறையாக மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து தேன்கனிக்கோட்டை காவல் டிஎஸ்பி சங்கீதா, கிருஷ்ணவேணியை நேரடியாக அவரது வீட்டிலேயே சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பண உதவிகளை வழங்கினார்.
மாணவியிடம் எதிர்க்கால விருப்பதை கேட்டபொழுது, மாணவி ஐஏஎஸ் ஆவதே தனது விரும்பம் தெரிவித்ததால், சில ஆலோசனைகளை வழங்கிய டிஎஸ்பி சங்கீதா, படிப்பிற்கான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சலுகைகளை வழங்கி வருவதால் மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தொலைபேசி எண்ணையும் வழங்கினார்.